இந்தியா

சாவர்க்கரை எதிர்ப்பவர்களை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும்: சிவசேனா

செய்திப்பிரிவு

சாவர்க்கரை எதிர்ப்பவர்களை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற சேவா தளம் வீர சாவர்க்கர் குறித்த புத்தகத்தை வெளியிட்டது. "வீர் சாவர்க்கர் கித்னே வீர்?(வீர சாவர்க்கர் எவ்வளவு பெரிய வீரர்) என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்தப் புத்தகத்தில் சாவர்க்கரின் தேசபக்தி குறித்தும், காந்தியைக் கொலை செய்த நாதூராம் கோட்சேவுடன் சாவர்க்கருக்கு தொடர்பு இருந்தது என்றும், ஆங்கிலேயரிடம் இருந்து உதவித்தொகை பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தப் புத்தகத்துக்கு பாஜக, சிவசேனா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் சிவசேனா இருந்தபோதிலும் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தது.

சிவசேனா கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், "வீர சாவர்க்கர் மிகப்பெரிய மனிதர். இன்னும் மிகப்பெரிய மனிதராகவே இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அவருக்கு எதிராகப் பேசி வருகின்றனர். இது அவர்களின் மனதில் அழுக்கு இருப்பதையே காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் சாவர்க்கர் பற்றி ராவத் மீண்டும் பேசியுள்ளார். அவர் கூறியதாவது
"வீர சாவர்க்கரை எதிர்ப்பவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இரண்டு நாட்கள் அடைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவருடைய தியாகம் மற்றும் நாட்டுக்கான அவரது பங்களிப்பு குறித்து அவர்களுக்குப் புரியும்.’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT