அண்டை நாடுகளில் உள்ள மதரீதியான சிறுபான்மை மக்கள் சந்திக்கும் துன்புறுத்தலில் இருந்து அவர்களை மீட்க மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மன்மோகன் சிங் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் ஆதரவு அளித்துள்ளனர் என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மை மக்கள் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவலைப் பரப்புகின்றன. கோடிக்கணக்கான அகதிகள் இந்தியாவுக்குள் வந்துவிட்டதால் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினம் என்கிறார்கள்.
ஆனால், இந்தச் சட்டம் 2014, டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்க வகை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் மக்கள் குடியுரிமையை இழப்பார்கள் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்புகின்றன.
அண்டை நாடுகளில் இருந்து மதரீதியான துன்புறுத்தலைச் சந்தித்து இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கவே பிரதமர் மோடி இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். ஆனால், வாக்கு வங்கிக்காக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்புகின்றன.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அண்டை நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தலைச் சந்திக்கும் சிறுபான்மையினரை மீட்க பல்வேறு காலகட்டங்களில் ஆதரவு தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கடந்த 1948-ம் ஆண்டு நேரு பேசியுள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு மாநிலங்களவையில் மன்மோகன் சிங் இதுகுறித்துப் பேசி, அப்போது இருந்த உள்துறை அமைச்சர் அத்வானியிடம் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையின மக்களை மீட்க வலியுறுத்தியுள்ளார்.
இப்போது பிரதமர் மோடி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இயற்றி அதைச் செய்துள்ளார். ஆனால், இந்தச் சட்டத்தை எதிர்த்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளோம். இந்தச் சட்டத்தைக் கொண்டு வர மக்கள் போதுமான எம்.பி.க்களை அளித்துள்ளார்கள்''.
இவ்வாறு நட்டா பேசினார்.