அடுத்த மாதம் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகருமான யோகானந்த் சாஸ்திரி கட்சியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார்.
மூத்த காங்கிரஸ் தலைவரான யோகானந்த் சாஸ்திரி அவர் மூன்று முறை டெல்லி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார். 2008 முதல் 2013 வரை டெல்லி சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றியவர்.
டெல்லி மாநகர தலைவர் சுபாஷ் சோப்ராவுடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் யோகானந்த் சாஸ்திரி பிடிஐயிடம் கூறுகையில், ''டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான டிக்கெட்டுகளை டெல்லி பிரிவின் கட்சி நிர்வாகிகள் விற்கத் தொடங்கிவிட்டார்கள். நான் எனது ராஜினாமாவை நேற்றே (வெள்ளிக்கிழமை) கட்சியின் டெல்லி விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பிசி சாக்கோவுக்கு அனுப்பியுள்ளேன்.''
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக கட்சியிலிருந்து முன்னாள் சபாநாயகர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.