விபத்தில் சிக்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட நடிகை ஷபானா ஆஸ்மி. 
இந்தியா

கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

பிடிஐ

மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி சென்ற கார், விபத்தில் சிக்கியது. இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை ஷபானா ஆஸ்மி. இவர் மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் செல்லும் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பிற்பகல் 3 மணி அளவில் மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாபூர் பகுதியில் காரில் வந்தபோது, சாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்து நடந்தவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நடிகை ஷபானா ஆஸ்மியையும், ஓட்டுநரையும் மீட்டனர். காயத்துடன் மீட்கப்பட்ட நடிகை ஷபானா ஆஸ்மி மும்பையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து ராய்காட் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அனில் பராஸ்கர் கூறுகையில், "சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது ஷபானா ஆஸ்மியின் கார் ஓட்டுநர் மோதியுள்ளார் என முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. விபத்தில் அவரின் முகம், கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் காரின் பின்பக்கம், ஷபானா ஆஸ்மியின் கணவரும் பாடலாசிரியருமான ஜாவித் அக்தர் தனி காரில் வந்துள்ளார். அவருக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. இந்த விபத்து குறித்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT