நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செய்தி ஒளிபரப்பு ஊடக அமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
அச்சு ஊடகங்களுக்கு இணையாக செய்தி ஒளிபரப்பு ஊடகத்துக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்கக் கோரி அந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
தற்போது ஜிஎஸ்டி வரி அச்சு ஊடகங்களுக்கு 5 சதவீதமும், காட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு 18 சதவீதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதைக் குறைத்து அச்சு ஊடகங்களுக்கு இணையாக காட்சி ஊடகங்களுக்கும் வரி விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி ஒளிபரப்பு ஊடக அமைப்பின் தலைவர் அர்னாப் கோஸ்வாமி வெளியிட்ட அறிவிப்பில், " தேசத்தில் செய்தி ஊடகங்களில் காட்சி ஊடகத்துக்கும், அச்சு ஊடகத்துக்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினோம். எங்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட நிதியமைச்சர், அதைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் என்பிஎப் தலைவர் அர்னாப் கோஸ்வாமி, துணைத் தலைவர்கள் ஜகி எம் பண்டா, சஞ்சீவ் நரேன், பொதுச் செயாலாளர் ஜெய் கிருஷ்ணா ஆகியோர் இருந்தனர்.