ராஜஸ்தானில் முதல் கட்டமாக நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் 97 வயதுப் பாட்டி கிராமப் பஞ்சாயத்து ஒன்றின் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜஸ்தானில் கடந்த நவம்பரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஊரகப் பஞ்சாயத்துக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதற்கட்டப் பஞ்சாயத்துத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 2,726 கிராமப் பஞ்சாயத்துகளுக்கான ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுமார் 17,242 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இதில் 97 வயது பாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து நீம் கா தானாவின் துணைப்பிரிவு அதிகாரி சாதுரம் ஜாட் பிடிஐயிடம் கூறியதாவது:
’’சிகார் மாவட்டத்தில் நீம் கா தானா உபக் கோட்டத்தின் கீழ் வரும் புராணவாஸ் கிராமப் பஞ்சாயத்திலிருந்து 97 வயது வித்யா தேவி வெற்றி பெற்றுள்ளார். இவர்தான் மாநிலத்திலேயே மிகவும் வயதான ஊராட்சித் தலைவர் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்த்தி மீனாவை 207 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
புராணாவாஸ் கிராமத்தின் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வித்யா தேவி 843 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற மீனா 636 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இத்தேர்தலில் வித்யா தேவியை எதிர்த்து மொத்தம் 11 பேர் வேட்பாளர்கள் களமிறங்கினர். 25 ஆண்டுகளுக்கு முன்பு 1990-ல் இவரது கணவர் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெக்கப்பட்டார்''.
இவ்வாறு நீம் கா தானாவின் துணைப்பிரிவு அதிகாரி தெரிவித்தார்.