நாட்டுக்கான பங்களிப்புக்காக மகாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அனில் தத்தா சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “மகாத்மா காந்தி நம் நாட்டின் தந்தை ஆவார். ‘பாரத ரத்னா' விருதை விட அவர் மிகவும் உயர்ந்தவர். முறையான அங்கீகாரத்துக்கு அப்பால் அவரை மக்கள் மிக உயர்வாக மதிக்கின்றனர். அவருக்கு ‘பாரத் ரத்னா' விருது வழங்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரும் விவகாரம் ஏற்கத் தகுந்ததல்ல” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
என்றாலும் மனுதாரரின் உணர்வுகளை மதிப்பதாக கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக மனுதாரர் அரசுக்கு மனு அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.
நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் மகாத்மா காந்தி அகிம்சை வழியில் முக்கியப் பங்காற்றினார். அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. -பிடிஐ