வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கான அனைத்து எஸ்-400 ஏவுகணைகளும் விநியோகம் செய்யப்படும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் கூறினார்.
டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் ரோமன் பபுஷ்கின் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுக்கான எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்து வருகிறது. இந்தியாவுக்கான அனைத்து எஸ்-400 ஏவுகணைகளும் 2025-ம் ஆண்டுக்குள் வழங்கப்படும்
காஷ்மீர் விவகாரம்
காஷ்மீருக்கு அண்மையில் சென்ற 15 நாடுகளின் தூதர்கள் குழுவில் ரஷ்யா இடம்பெறவில்லை. எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுவது உண்மையில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறையில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. அதனால் தூதர்கள் குழுவில் ரஷ்யா இணையவில்லை.
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் சீனா எழுப்புகிறது. இது இந்தியா, சீனா சார்ந்த விவகாரம். எங்களைப் பொறுத்தவரை சிம்லா ஒப்பந்தம், லாகூர் உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2007 முதல் ரஷ்ய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள எஸ்-400 ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த வகை ஏவுகணை ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக 550 கோடி டாலரில் 5 யூனிட் எஸ்-400 ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – ரஷ்யா இடையே கடந்த 2018 அக்டோபரில் ஏற்பட்டது. இந்த கொள்முதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.
ஆனால் இந்த ஒப்பந்தம் தேசப் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் பின்வாங்க மாட்டோம் என இந்தியா கூறிவிட்டது.