கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் : படம் ஏஎன்ஐ 
இந்தியா

என்னிடம் கேட்காமல் சிஏஏக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கேரள அரசிடம் விளக்கம் கேட்பேன்: ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காட்டம்

பிடிஐ

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடரும் முன் என்னிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். என்னிடம் கேட்காததால், மாநில அரசிடம் விளக்கம் கேட்பேன் என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள், பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதில் கேரள அரசு கடந்த வாரம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதுமட்டுமல்லாமல், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கும் தொடரப்பட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநில அரசும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த முதல் அரசும் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தபோதே ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கடுமையாக எதிர்த்தார். அரசியலமைப்புக்கு எதிராகக் கேரள அரசு செயல்படுகிறது. மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது தவறு என்று தெரிவித்தார்

இதற்கிடையே மாநில ஆளுநர் ஆரிஃப் கானை கலந்தாய்வு செய்யாமல், உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு வழக்குத் தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.

டெல்லிக்கு இன்று வந்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் கேரள அரசின் செயல்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது:

"ஜனநாயகத்தில் எதிர்ப்பு அவசியமானது. அதில் தவறில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளா இருந்தால், எதிர்ப்புத் தெரிவித்தால் தெரிவிக்கட்டும். அது ஜனநாயக உரிமை.

ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதும் சட்டத்தையும், அரசியலமைப்பையும் மீறிய செயலாகும்.

அதிலும் அரசியலமைப்புச் சாசன பதவியில் இருக்கும் என்னைக் கலந்தாய்வு செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு எவ்வாறு வழக்குத் தொடர முடியும்?

என்னுடைய பணி என்பது, மாநில அரசு அரசியலமைப்புச் சட்டப்படி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்காணிப்பதாகும். நான் யாரைக் காட்டிலும் உயர்ந்தவன் அல்ல.

என்னைப் பொறுத்தவரை என்னுடைய பணிகள் குறித்து அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எந்த விஷயத்திலும் என்னை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கும் முன் முதல்வர் என்னிடம் முறையாகக் கலந்தாய்வு செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் எந்த தீர்மானமும் நிறைவேற்றும் முன் எனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றில் அனைவருக்கும் ஒரேமாதிரியான கருத்து இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மாறுபட்ட கருத்து இருப்பதாலும் பிரச்சினையில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரைக் கேரள அரசு முறையாக அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றியதா என்பதுதான். ஆனால், கேரள அரசு சட்டப்பேரவையின் விதிகளை மீறிவிட்டது.

மத்திய அரசின் பிரதிநிதியாக இங்கு நான் பணியாற்றி வருகிறேன். எனக்கு நான்தான் செய்தித் தொடர்பாளர். எனக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் எந்தவிதமான அதிகாரப் போட்டியும் இல்லை என்பதையும் கூறுகிறேன்.

என்னைக் கலந்தாய்வு செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் சிஏஏ சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது குறித்து நான் கேரள அரசிடம் விளக்கம் கேட்பேன். எங்கு சட்டவிதிமுறை மீறல்கள் நடந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறினாலும் நான் அரசிடம் விளக்கம் கேட்பேன்."
இவ்வாறு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தார்

SCROLL FOR NEXT