நிர்பயா குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனு தாக்கல் செய்திருப்பதால் ஜனவரி 22ம் தேதி நால்வரையும் தூக்கிலிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தெரியவர, இது குறித்து நிலவரம் என்ன என்று விளக்கம் கேட்டு டெல்லி நீதிமன்றம் திஹார் சிறை அதிகாரிகளுக்கு நிலை அறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளது.
நால்வரில் வினய் ஷர்மா, முகேஷ்குமார் சிங் ஆகியோருக்கான அனைத்து வாய்ப்புகளும் முடிந்து விட்டன, ஆனால் பவன் குப்தா, அக்ஷய் சிங் ஆகிய இருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் மனு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி முகேஷ் சிங் தனது மரண தண்டனையை எதிர்த்து கருணை மனு தாக்கல் செய்துள்ளார். இதே முகேஷ் குமார் சிங் தான் மரண தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். ஆனால் முகேஷ் சிங் இது தொடர்பாக அமர்வு நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ அணுக வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தனது கருணை மனு குடியரசுத்தலைவரிடம் நிலுவையில் உள்ளதால் மரண தண்டனையை ஒத்தி வைக்க வேண்டும் என்று முகேஷ் மனு செய்தார்.
இதனையடுத்து மரண தண்டனையை வேண்டுமென்றே தாமதம் செய்ய 4 குற்றவாளிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. முகேஷ் ஏன் இரண்டரை ஆண்டுகளாக கருணை மனு மேற்கொள்ளவில்லை? 2017-ல் இவர்கள் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின் ஏன் சிறை அதிகாரிகள் இவர்களிடத்தில் கருணை மனு தாக்கல் செய்யலாம் என்று ஏன் அறிவுறுத்தவில்லை? என்று நீதிமன்றம் சரமாரிக் கேள்வி எழுப்பியது.
அக்டோபர் 29 மற்றும் டிசம்பர் 18,,1 2019 அன்று கருணை மனுக்கள் மேற்கொள்ள சிறை அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர், ஆனால் இதை இன்னும் முன் கூட்டியே செய்திருக்க வேண்டும், என்று கோர்ட் கண்டித்தது.
டெல்லி அரசின் வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா கூறும்போது, குற்றவாளி அக்ஷய் சீராய்வு மனுவை 2019 வரை தாக்கல் செய்யவில்லை இதுதான் தூக்கு தண்டனை தாமதத்திற்குக் காரணம் என்றார்.
இவர் மேலும் கூறும்போது, தண்டனை ரத்து அல்லது குறைப்புக்கான அனைத்து சாத்தியங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்ளும் வரை மரண தண்டனை நிறைவேற்ற வழியில்லை. மரண தண்டனையை ஒத்திவைக்குமாறு முகேஷ் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளி) நடைபெறுகிறது.