இந்தியா

கர்நாடக முதல்வரை பொது மேடையில் மிரட்டும் விதமாகப் பேசிய மடாதிபதியால் பரபரப்பு: கோபமடைந்த எடியூரப்பா

செய்திப்பிரிவு

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை பொது மேடையில் மடாதிபதி மிரட்டும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வசனாநந்தா சுவாமி, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கா விட்டால், ஒட்டுமொத்த பஞ்சமாஷாலி சமுதாயமும் உங்களை புறக்கணித்து விடும் என முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடியூரப்பா, இருக்கையை விட்டு எழுந்து இது போன்று பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதியிடம் கூறினார். ஆனாலும் மடாதிபதி, முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து அமைதியாக இருக்கையில் அமரும்படி மிரட்டும் வகையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அமைதியான முதலமைச்சர் எடியூரப்பா, மடாதிபதி கூறியதை எல்லாம் செய்ய முடியாது என்றும், விண்ணப்பம் வைக்கலாம், தம்மை மிரட்ட முடியாது என்றும் கூறினார். முதலமைச்சர் இருக்கையில் தம்மை அமர வைக்க 17 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார்கள் என்று கூறிய எடியூரப்பா, அவர்களுக்கு துரோகம் இழைக்க முடியாது என்றும் கூறினார்.

அதாவது எடியூரப்பா ஆட்சி நீடிக்க வேண்டும் ஆனால் அது நடக்க வேண்டுமென்றால் குறைந்தது 3 பஞ்சமஷாலி அமைச்சர்களாவது அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கூறினார் வசனாநந்தா.

கோபமடைந்த எடியூர்ப்பா, என்னுடன் ஒருவருக்கு ஒருவர் பேசும் விஷயத்தை பொதுமேடையில் பேசுவதா, நான் தேவையில்லை என்றால் பதவியை தூக்கி எறிந்து விடுகிறேன் என்று பேசியது அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT