இந்தியா

தீவிரவாதிகளை அழைத்துச் செல்ல ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினேன்: போலீஸ் டிஎஸ்பி தாவிந்தர் சிங் வாக்குமூலம்

செய்திப்பிரிவு

காஷ்மீரில் இருந்து சண்டிகருக்கு தீவிரவாதிகளை அழைத்துச் செல்ல ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினேன் என்று போலீஸ் டிஎஸ்பி தாவிந்தர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரை போலீஸார் விரட்டிச் சென்று ஜம்முவின் மிர் பஜார் பகுதியில் பிடித்தனர். போலீஸ் டிஎஸ்பி தாவிந்தர் சிங் காரை ஓட்டிச் சென்றதும் 2 தீவிரவாதிகளும் ஒரு வழக்கறிஞரும் காரில் இருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக தாவிந்தர் சிங்கிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளை போலீஸில் ஒப்படைக்கச் சென்றதாக அவர் முதலில் கூறினார்.

இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

காஷ்மீரின் புல்வாமா பகுதி டிரால் பகுதியை சேர்ந்தவர் தாவிந்தர் சிங். கடந்த 1990-ல்காஷ்மீரில் போலீஸில் அவர்சப்-இன்ஸ்பெக்டராக பணியில்சேர்ந்தார். பல்வேறு என்கவுன்ட்டர்களில் பங்கேற்றதால் குறுகிய காலத்திலேயே அவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2003-ம் ஆண்டில் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ நாட்டில் ஐ.நா. அமைதி படையில் பணியாற்றினார். காஷ்மீர் திரும்பிய பிறகு டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு உயர்ந்தார். கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஸ்ரீநகர் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றினார்.

மிக நீண்ட காலமாக ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங்கிற்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அந்தஅமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் நவீத் பாபு, ரஃபி, வழக்கறிஞர் இர்பான் ஆகியோர் காரில் இருந்தனர். நவீத் பாபுவையும் ரஃபியையும் சண்டிகருக்கு அழைத்துச் செல்ல டிஎஸ்பி தாவிந்தர் சிங் ரூ.12லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். இதை அவரே ஒப்புக் கொண்டுவிட்டார். அவருடன் இருந்த தீவிரவாதி நவீத் பாபு, பல போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளான்.

கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட அப்சல் குரு, டிஎஸ்பி தாவிந்தர் சிங் பெயரை குறிப்பிட்டான். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் சிக்கவில்லை. போதை பொருள் கடத்தலிலும் தாவிந்தர் சிங்கிற்கு முக்கிய தொடர்பு உள்ளது.

அவரது 2 மகள்கள் வங்கதேசத்தில் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

கடைசியாக ஸ்ரீநகர் விமான நிலைய பாதுகாப்பில் இருந்ததால் அவரது நடவடிக்கைகள் குறித்து சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம்.

தாவிந்தர் சிங்கிற்கு தற்போது 57 வயதாகிறது. இவ்வளவு காலம்தீவிரவாதிகளுடன் கைகோத்து போலீஸுக்கு துரோகம் இழைத்துள்ளார். மன்னிக்க முடியாத தவறை செய்துள்ளார். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT