குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்துக்கு கேரளா, மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ‘‘மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்டம் நமது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மதச்சார்பற்ற நாடு என்ற அரசியல் சட்டத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.