சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதியில்லை. இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயதுபெண்களையும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வுசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி கடந்த நவம்பர் 14-ம் தேதி உத்தரவிட்டது.
சபரிமலை விவகாரம் மட்டுமின்றி, மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சிபெண்கள் வேறு சமுதாய ஆண்களை திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது குறித்தும் புதியஅமர்வு விசாரிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், சபரிமலை உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மனுக்களை 9 நீதிபதிகள் அமர்வு ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், சுபாஷ் ரெட்டி, கவாய், சூரிய காந்த்ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:
சபரிமலை கோயில் தொடர்பான மறுஆய்வு மனுக்களை நாங்கள்விசாரிக்கவில்லை. இது தொடர்பாக5 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் குறித்து மட்டுமே விசாரிப்போம். மேலும் இதனுடன், மசூதிகளில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் விவகாரம், பார்சிபெண்கள் வேறு சமுதாய ஆண்களை திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது மற்றும் போரா முஸ்லிம் உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான அனைத்து மனுக்களையும் 3 வாரம் கழித்து ஒன்றாக விசாரிக்க உள்ளோம்.
என்னென்ன அம்சங்கள் குறித்துவிசாரிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் ஏ.எம்.சிங்வி உள்ளிட்ட 4 மூத்த வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம்உச்ச நீதிமன்ற செயலாளர் தலைமையில் 17-ம் தேதி நடைபெறும். வாதத்தை முன்வைக்க ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதுகுறித்தும் இக்குழு ஆலோசிக்கும். இதுகுறித்து முடிவு செய்வதற்கு 3 வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன் பிறகு விசாரணை நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகள், அனைத்து விவகாரங்களிலும் தனிமனிதனுக்கான சம உரிமையை உறுதிப்படுத்துகிறது. அதாவது சாதி, மதம், பாலின ரீதியாக பாகுபாடு காட்டக்கூடாது.
இதுபோல, 25 மற்றும் 26-வது பிரிவுகள் அனைவருக்குமான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. அதாவது மத ரீதியிலான நடைமுறைகளை பாதுகாக்க குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது. இந்நிலையில், தனி மனிதனின் சம உரிமைக்கும் மத ரீதியிலான சுதந்திரத்துக்கும் இடையேதான் இப்போது பிரச்சினை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.