இந்தியா

விஐபிகளின் பாதுகாப்பு பணியிலிருந்து தேசிய பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்ள முடிவு

செய்திப்பிரிவு

முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படையினரை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தீவிரவாத தாக்குதல்களை எதிர்த்துப் போரிடுவதற்காக, கடந்த 1984-ம் ஆண்டு தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப சிறப்பு பயிற்சி பெற்றிருந்தனர். பின்னர் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் (விஐபி) பாதுகாப்புப் பணியிலும் இந்தப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். கறுப்பு பூனைப் படை என்று அழைக்கப்படும் இவர்கள் நவீன ஆயுதங்களை ஏந்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றால் அதை எதிர்கொள்ள போதுமான என்எஸ்ஜி கமாண்டோக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு கருதியது. இதையடுத்து, விஐபிகளின் பாதுகாப்பு பணியிலிருந்து என்எஸ்ஜி படையினரை விலக்கிக் கொள்வது குறித்து 2012-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதுகுறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. இதன்படி, 350 அரசியல்வாதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களுக்கான பாதுகாப்பு பணியிலிருந்து 1,300 என்எஸ்ஜி கமாண்டோக்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் உள்ளிட்ட சிலருக்கு என்எஸ்ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விஐபிகளுக்கான பாதுகாப்பு பணியிலிருந்து என்எஸ்ஜி கமாண்டோக்களை முற்றிலும் விலக்கிக் கொள்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மேலும் 450 கமாண்டோக்கள் இப்பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

அதேநேரம், விலக்கிக் கொள்ளப்படும் என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு பதிலாக, விஐபிகளுக்கு சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.- பிடிஐ

SCROLL FOR NEXT