இந்தியா

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான தகவலை பரப்பும் எதிர்க்கட்சிகள்: மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவலை பரப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில காவல் துறையின் பல்வேறு திட்டப் பணிகளை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினராக உள்ளவர்கள் மத ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்கள் இந்தியாவில் வந்து தஞ்சமடைகிறார்கள். அவர்கள் நலனில் முந்தைய அரசு எந்த அக்கறையும் செலுத்தவில்லை. மற்றொரு தரப்பினர் அதிருப்தி அடைவார்கள் என கருதியதே இதற்குக் காரணம்.

இந்நிலையில், பக்கத்து நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியினர் இந்த சட்டம் குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இதன்மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

குறிப்பாக, குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இந்த சட்டத்தில் அதற்கான அம்சம் எங்கே இருக்கிறது எனஅவர்களால் சுட்டிக்காட்ட முடியுமா என சவால் விடுக்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எந்தப் புகாரும் கூற முடியவில்லை என்பதால் இதுபோன்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

எனவே, பாஜகவினர் வீடுவீடாக சென்று, புதிய சட்டம் குறித்த உண்மையை பொதுமக்களிடம் விளக்கிக் கூறி எதிர்க்கட்சியினரின் பொய்யை முறியடிக்க வேண்டும். பாஜகவினரின் பிரச்சாரம் முடிந்த பிறகு இந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து மக்கள் புரிந்து கொள்வார்கள்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் ரத்த ஆறுஓடும் என சில எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், சிறப்பு அந்தஸ்துரத்து செய்த பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. வன்முறை காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT