தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) என்ற பெயரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மறைமுகமாக கொண்டு வரப் படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஏ.கே.அந்தோனி, கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) திட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்று பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் கூறுவதை நம்ப வேண்டாம். என்பிஆர் என்ற பெயரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மறைமுகமாகக் கொண்டு வரப்படுகிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த குடியுரிமை திருத்த சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் ஏற்பட உள்ள ஆபத்துகளை உணர்ந்தே, மாணவர் சமுதாயம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் போலீஸ் மாநிலங்களாக மாறிவிட்டன.
ஜம்மு காஷ்மீரில் அமல் செய்யப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன.
அனைத்து தரப்பு மக்களுக்கும் சமஉரிமை, சட்டத்தின் பாதுகாப்பு, சமநீதி கிடைக்க காங்கிரஸ் தொண்டர்கள் தோள் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை நிறுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாணவர்களின் ஜனநாயக குரலை ஒடுக்க அடக்குமுறையை ஏவி விடுகிறது. மாணவ சமுதாயத்துக்கு குறைந்த கட்டணத்தில் வேலைவாய்ப்பு சார்ந்த கல்வி கிடைக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.