உச்சநீதிமன்ற உத்தரவின்படி சனிக்கிழமை இரண்டு உயரமான அடுக்குமாடி வளாகங்கள் இன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. 
இந்தியா

கேரளாவில் மராடு அடுக்குமாடிக் கட்டிடங்கள் தகர்ப்பு

பிடிஐ

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கட்டுப்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மராடு அடுக்குமாடிக் கட்டிடங்கள் இன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்கும்படி, கடந்த மே 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு கட்டிடத்தை இடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய ஒரு பகுதியில் கட்டுமானம் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் கேரளாவில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகளை 138 நாட்களுக்குள் இடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, மராடு நகராட்சியில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களை இடிக்கும் பணி இன்று காலையில் தொடங்கியது.

செரீன் குடியிருப்பின் இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்பு

மராடு நகராட்சியில் அமைந்துள்ள ஹோலி ஃபெய்த் எச் 20 குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை 11.18 மணிக்கு இடிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஆல்ஃபா செரீன் குடியிருப்பின் இரட்டைக் கோபுரங்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு இடிக்கப்பட்டன.

இரண்டு கட்டிடங்களும் நொடிகளில், தூசி நிறைந்த புகையின் நடுவே நொறுங்கி விழுந்தன. இடிப்பு மண்டலத்திற்கு வெளியே இருந்து இடிப்பதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

இரண்டு சட்டவிரோத அடுக்குமாடி வளாகங்களைச் சுற்றியுள்ள மக்களை வெளியேற்றுவது இன்று காலை கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே நிறைவடைந்தது.

SCROLL FOR NEXT