இந்தியா

காஷ்மீர் மக்களுடன் 15 நாடுகளின் தூதர்கள் சந்திப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்கா உட்பட 15 நாடுகளின் தூதர்கள் காஷ்மீரின் உண்மை நிலவரத்தை ஆய்வு செய்ய அங்கு சென்றனர். பல்வேறு தரப்பு மக்களை அவர்கள் சந்தித்துப் பேசினர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க அங்கு படைகள் குவிக்கப்பட்டன. செல்போன், இணைய சேவை ரத்து செய்யப்பட்டன. பதற்றமான பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டது. தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் காஷ்மீரின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ஸ்ரீநகர் சென்றனர். இந்த குழுவில் வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவு, தென் கொரியா, மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் இடம்பெற்றிருந்தனர்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 15 நாடுகளின் தூதர்களும் ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றனர். அங்கிருந்து வாகனங்கள் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு மூத்த ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான், காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து தூதர்களுக்கு விரிவான விளக்கம் அளித்தார். பின்னர் தூதர்கள் குழு அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசியது.

இதன்பிறகு ஸ்ரீநகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 15 தூதர்களும் ஜம்மு சென்றனர். அங்கு அவர்கள் நேற்று பல்வேறு தரப்பு மக்களை சந்தித்துப் பேசினர். கிழக்கு பாகிஸ்தான் அகதிகள், குஜ்ஜார் ஐக்கிய முன்னணி, பாகிஸ்தான் அகதிகள், வால்மீகி சமாஜ், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தூதர்கள் குழுவிடம் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது சரியே என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியன், தூதர்களிடம் விரிவான விளக்கம் அளித்தார். அப்போது மாநில டிஜிபி தில்பாக் சிங்கும் உடன் இருந்தார்.

பின்னர் மாலையில் ஆளுநர் கிரிஷ் சந்திரா முர்மு, தூதர்களுக்கு விருந்து அளித்தார். காஷ்மீர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆளுநர் விவரித்தார். இதன்பிறகு தூதர்கள் குழு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி திரும்பியது.

SCROLL FOR NEXT