உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வீடியோ பதிவுகளை மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27 மற்றும் டிச.30 தேதிகளில் நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஜன.2 அன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெறவுள்ளது.
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தனது ஆளுகைக்குட்பட்ட 13 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா கண்காணிப்பில் வீடியோ பதிவு செய்து, அவற்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையும் இதேபோல தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி ஆஜராகி, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடக்கிறது என்ற அனுமானத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால்தான் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்து தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது" என்றார்.
பதிலுக்கு முகுல் ரோஹ்தகி, ‘‘இந்த வழக்குக்கும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் அவரை வாதிட அனுமதிக்கக் கூடாது" என எதிர்ப்பு தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், 13 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய
வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக
உயர் நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
அதேபோல சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி நகர்ப்புற பகுதிகளுக்கும் தேர்தலை உடனடியாக அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.
இதுதொடர்பாக பின்னர் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.