இந்தியா

போலீஸிடமிருந்து தப்பிக்க கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் அதிரடிப்படை காவலர் களிடமிருந்து தப்பிக்க கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பொதுமக்கள் மீது குண்டு பாய்ந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

ஹைதராபாத் பகுதியில் உள்ள மாதாபூரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 3 பேர் திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை விசாரிக்க அதிரடிப் படை காவலர்கள் சென்றனர். அதிரடிப்படை காவலர்களைக் கண்டதும் சந்தேகத்துக்குரிய நபர்கள் காரில் தப்பிக்க முயன்றனர்.

அவர்களை துரத்திச் சென்றபோது ஜூப்ளி ஹில்ஸ் சாலையில், காவலர்கள் மீது காரில் இருந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் இருந்த தர்மேந்தர் சிங் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதனைக் கண்டு பொது மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். காவலர்கள் விடாமல் துரத்தி சென்று மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். அதில் துப்பாக்கி சூடு நடத்திய ஹமீம் என்கிற அப்துல் என்பவர் பிடிபட்டார். மற்ற இருவர் தப்பி விட்டனர்.

ஹமீமிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் குல்பர்கா, ராய்சூர் பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரிய வந்தது. தலைமறைவானவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். படுகாயமடைந்த தர்மேந்தர் சிங் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT