இந்தியா

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ் குமார் முயற்சியால் உ.பி.யில் அமைதியாக நடைபெறும் குடியுரிமை எதிர்ப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உ.பி.யின் பல்வேறு பகுதிகளில் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில்பெரும்பாலானவற்றில் போராட்டக்காரர்கள் மற்றும் உ.பி. போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டு 20-க்கும்அதிகமான உயிர்கள் பலியாகின.

எனினும், உ.பி.யின் சஹரான்பூர் மாவட்டத்தில் மட்டும் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் தொடர்கிறது. இதன் பின்னணியில், சஹரான்பூர் மாவட்டதலைமை காவல்துறை கண்காணிப்பாளரும் தமிழருமான பி.தினேஷ்குமார் இருப்பதாக கருதப்படுகிறது.

கோவையின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக இளநிலை பட்டத்திற்கு பிறகு குடிமைப் பணி தேர்வில் வென்று 2009-இல் உபியின் ஐபிஎஸ் அதிகாரி ஆனவர் தினேஷ் குமார். மேட்டூர் சின்னதண்டா கிராமத்தைச் சேர்ந்தஇவர், விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். இவர், தனது நேரடிக்கண்காணிப்பில் மாவட்ட போலீஸாருடன் பொதுமக்களையும் திறமையுடன் கையாண்டு வருவதாக சஹரான்பூர்வாசிகள் பாராட்டுகின்றனர்.

இதுகுறித்து தியோபந்தின் பழம்பெரும் மதரஸாவான தாரூல் உலூமின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் உஸ்மானி கூறும்போது, ‘இங்கு நடைபெறும் அரசியல் போராட்டங்களிலும் கலவரம் ஏற்படுவது வழக்கம். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சஹரான்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் நிகழும் போராட்டங்களில் தடியடி நடத்தும் அளவிற்கு கூட பிரச்சினை ஏற்படவில்லை’ எனத் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே மிக அதிகமாக சஹரான்பூரில் சுமார் 1,500 மதரஸாக்கள் உள்ளன. இங்கு நவம்பர் 9-ல் அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு முன் தினேஷ் குமார் முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு கிராமத்திலும், மதரஸாக்களிலும் நடத்திய கூட்டங்கள் குடியுரிமை போராட்டத்திலும் பலன் தந்துள்ளது.

இதில், ஏற்கெனவே இருந்த அமைதிக் குழுவை இளைஞர்கள், ஊராட்சி மன்றங்களில் வெற்றி பெற்ற மற்றும் தோல்வியடைந்த உறுப்பினர்களை சேர்த்து மாற்றி அமைத்துள்ளார். பொதுமக்கள் மற்றும் காவல் துறைக்கு இடையேஇவர்கள் பாலமாக இருந்து செயல்பட வைத்ததால் கலவரத்திற்கு வழியில்லாமல் போனது.

அயோத்தி தீர்ப்பும், டிசம்பர் 6-ல் வந்த பாபர் மசூதி உடைப்பு தினமும் அமைதியாக முடிந்துள்ளது. இதுபோன்ற தினேஷ் குமாரின் பல நடவடிக்கைகள் சஹரான்பூர்வாசிகளை கவர்ந்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அதிகாரி தினேஷ்குமார் கூறும்போது, ‘போராட்டங்களில் வெளியில் தவிர்த்து, உள்ளேகாவலர்களுடன் நானும் புகுந்துநின்று மக்கள் நம்பிக்கையை பெற்றோம். அவர்கள், எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்தை தடுக்காத வகையில் பார்த்துக் கொண்டோம். அயோத்தி தீர்ப்பு வெளியான நாளிலும், டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்திலும் அமைதி நிலவியது.பின்னர் அமைதிக் குழுக்களுடன், சில முக்கிய பொது மக்களையும் அழைத்து தேநீர், உணவு விருந்துகள் நடத்தி நன்றி தெரிவித்தது இந்தமுறை அமைதிக்கு முக்கியக் காரணமானது’ என்றார்.

உ.பி.யின் எட்டாவா, ஷாம்லி, கான்பூர், அலிகர் உள்ளிட்ட மதக் கலவரத்திற்கு பெயர்போன முக்கிய மாவட்டங்களில் பணியாற்றிய தினேஷ்குமார் நவம்பர், 2018 முதல் சஹரான்பூர் எஸ்.எஸ்.பி. ஆனார். இங்கு கடந்த அக்டோபரில் இரு பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலையாகி பதற்றம் எழுந்தது. இதன் 5 குற்றவாளிகளை இரண்டு வாரங்களில் கண்டுபிடித்து, தொழில் மற்றும் குடும்பத் தகராறில் நிகழ்ந்த வழக்கை தீர்த்து வைத்தார்.

SCROLL FOR NEXT