குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை செய்தார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி நிறைவேறியது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்து, சீக்கியர், பவுத்தர், சமணர், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டம் நிறைவேறியது முதல் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இப்போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சட்டம் முஸ்லிம்கள் உள் ளிட்ட இந்திய மக்களின் குடி யுரிமையை பாதிக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எனினும் போராட்டம் தொடர்கிறது. அதேவேளையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் பரவலாக பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய அமைச் சர் அமித் ஷா தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, புலனாய்வுத் துறை இயக்குநர் அரவிந்த் குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் பங்கு குறித்து வந் துள்ள உளவுத் தகவலும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.