சிபிஐ சிறப்பு நீதிபதி பி.ஹெச். லோயாவின் திடீர் மரணம் தொடர்பாக ‘சிலர்" புதிய ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டுள்ளதாகவும், அப்படி புதிய ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் லோயா மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் திறக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2014-ல் நீதிபதி லோயா மாரடைப்பினால் மரணமடைந்தார். ஆனால் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவை கூறிவந்தன. லோயா மரணமடைந்த தருணத்தில் சொராபுதீன் போலி என் கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தார், இதில் இப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டது யார் யார் என்று அனில் தேஷ்முக்கிடம் கேட்ட போது அவர் பெயர்களைக் கூற மறுத்து விட்டதகா செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பதும், பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இருக்கும் விரிசல்களும் இந்த விவகாரத்தை மேலும் கூர்ந்து அவதானிக்கச் செய்துள்ளது.
இதனையடுத்த பாஜக எம்.எல்.ஏ.ஆஷிஷ் ஷேலர் கூறும்போது, “உச்ச நீதிமன்றமே முடித்து வைத்த ஒரு வழக்கை அனில் தேஷ்முக் மீண்டும் கிளறுவது சட்டரீதியானதா அல்லது பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.