நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதையடுத்து, மீண்டும் இயல்புநிலைக்குப் பொருளாதாரத்தைக் கொண்டுவரும் வகையில் பிரதமர் மோடி நேரடியாக களத்தில் இறங்கி, பட்ஜெட் தொடர்பான பணிகள் அனைத்தையும் மேற்பார்வை செய்து, கேட்டறிந்து வருகிறார்.
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவான 5 சதவீதமாக வீழச்சியடைந்துத. குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை மோசமாகச் செயல்பட்டதாலும், வேலையின்மை அதிகரிப்பாலும் வளர்ச்சி குறைந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்த நிலையில், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக மேலும் வீழ்ச்சி அடைந்தது.
பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். பொருளாதார வளர்ச்சி மீது மத்திய அரசு அக்கறை காட்டவில்லை, வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை, கட்டமைப்பு திட்டங்களுக்குச் செலவிடவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு பாதைக்கும், வளர்ச்சிப்பாதைக்கும் கொண்டுவரும் போக்கில் மத்திய அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
ஆனால், இந்த முறை பிரதமர் அலுவலகம் பட்ஜெட் தொடர்பான பணிகளை வெறும் மேற்பார்வையிடாமல் பிரதமர் மோடியை நேரடியாக களத்தில் இறங்கி பணிகளைக் கவனித்து வருகிறார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி ஆயோக்கில் பொருளாதார வல்லுநர்களிடம் நேரடியாக ஆலோசனையில் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சியின் தேக்கநிலைக்கு என்ன காரணம், பொருளாதாரத்தை இயல்புப் பாதைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். மேலும், தொழில்துறையினர், நிறுவனத் தலைவர்களையும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
தொழில்துறை தலைவர்கள், பெருநிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருடன் சமீபத்தில் இருமுறை பிரதமர் மோடி நேரடியாக உரையாடினார். அப்போது அவர்களின் தேவைகள், பொருளாதாரத்தின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும், அவர்களின் கருத்துக்களையும் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, தொழில்துறைத் தலைவர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள்அளித்த ஆலோசனைகள், கருத்துக்கள், பிரச்சினைகளைக் களைய அளித்த ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பொறுமையாகக் கேட்டறிந்தார்.
மேலும், ஒவ்வொரு துறையும் அடுத்த 5ஆண்டுகளுக்கான செயல்திட்டம் அதாவது என்ன செய்யப் போகிறோம் என்ற வரைவு அறிக்கையைத் தயாரித்து அளித்த அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இந்த திட்டங்கள் குறித்து அனைத்து அமைச்சர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
பட்ஜெட் குறித்து மக்களின் கருத்தும் அறிய வேண்டும், மக்களும் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் அறிய வேண்டும் என்பதற்காகத் தனி இணையதளத்தையும் மோடி அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு இன்னும் 3 வாரங்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் சிக்கல்கள், அதைக் களைவதற்கான திட்டங்கள், பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி மிகுந்த தீவிரமாக இறங்கி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.