தனியார் ரயில்களுக்கான வரைவு விதிமுறைகளை ‘நிதி ஆயோக்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.
ரயில் சேவையை தனியாரிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, நாட்டிலேயே முதல் முறையாக டெல்லி, லக்னோ இடையே தேஜாஸ் விரைவு ரயில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சேவையை தொடங்கியது. இந்த ரயிலை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது.
இந்நிலையில், ரூ.22,500 கோடி முதலீட்டில் 100 வழித்தடங்களில் 150 ரயில்களை தனியார் இயக்க அனுமதிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு விதிமுறைகளை ‘நிதி ஆயோக்’ அமைப்பு தயாரித்துள்ளது. அதை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சந்தை நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் ரயில் கட்டணங்களை வசூலித்துக் கொள்ளலாம். ரயில்வே மூலம் இயக்கப்படும் ரயில் புறப்படும் நேரத்துக்கும் தனியார் இயக்கும் ரயில் புறப்படும் நேரத்துக்கும் இடையே 15 நிமிட இடைவெளி இருக்க வேண்டும். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்க வேண்டும். அதேநேரம் குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயிலில் உள்ள பெட்டிகள் எண்ணிக்கையை மிஞ்சக்கூடாது.
ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ.ஆக இருக்க வேண்டும், பாதுகாப்புப் படை மற்றும் ஊழியர்களை சொந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ரயில்களின் பராமரிப்புப் பணிகளை தனியார் நிறுவனமே மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் (ஆர்டிஎஸ்ஓ) தர விதிகளுக்கு நிகராக ரயில்களை பராமரிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்காக இப்போதுள்ள ரயில்வே பணிமனைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரத்துக்குட்பட்டு, ரயில்கள் மற்றும் அதற்கான இன்ஜின்களை தங்கள் விருப்பப்படி வாங்கிக் கொள்ளலாம். விபத்தினால் ஏற்படும் மனித உயிரிழப்பு, காயம், உடமைகளுக்கான சேதம் ஆகிய வற்றுக்கு இழப்பீடு வழங்கக்கூடிய வகையில் காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ