பிஹார் முசாபர்பூர் பெண்கள் காப்பகம் ஒன்றில் கொல்லப்பட்டதாக புகார் எழுந்த நாட்டை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட பெண்கள் உயிருடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பாக முசாபர்பூர் பெண்கள் காப்பகத்தில் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக எழுந்த நாட்டை உலுக்கியச் சம்பவத்தில் 35 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐயம் எழுந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த போது அரசியல் செல்வாக்கு மிகுந்த காப்பக உரிமையாளர் பிர்ஜேஷ் தாக்கூர் மற்றும் இவரது கூட்டாளிகள் 11 பெண்களை கொலை செய்திருப்பார்கள் என்று கூறியது.
இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த சிபிஐ 2 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இது ஆண் மற்றும் பெண்ணினுடையது என்றும் கூறியது.
அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் கூறும்போது, கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட பெண்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார். பிஹாரில் உள்ள 17 காப்பகங்கள் மீது விசாரணை நடத்தியது. 13 காப்பகங்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 4 காப்பகங்கள் மீதான விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டது காரணம் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் சிபிஐ சமர்ப்பித்த நிலை அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டது.
இளம் பெண்களுக்கு போதைப்பழக்கத்தை ஏற்படுத்தி விட்டு ஆபாச நடனம் ஆடவைக்கப்பட்டதாக அரசு காப்பகம் மீது புகார் எழுந்ததோடு இதில் பல அரசியல் புள்ளிகளும் அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பதாக பெரிய புகார்கள் எழுந்தன. பிரஜேஷ் படேல் மீதான குற்றப்பத்திரிகையில் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. கோர்ட் விசாரணைக்கு இவரை அழைத்துச் சென்ற போது அவர் சிரித்தபடியே சென்றதும் நினைவிருக்கலாம்.
டாடா இன்ஸ்டிட்யூட் சமூக விஞ்ஞானத்துறை ஆய்வின் மூலம் இந்தப் பாலியல் வன்கொடுமை உலகிற்கு தெரியவந்தது. பத்திரிகையாளர் நிவேதிதா ஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில் இன்று மனுதாரர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஷோயப் ஆலம் கோர்ட்டில் கூறும்போது, காப்பகப் பெண்கள் பலர் கொலைகள், பலாத்காரங்கள் பற்றி கூறிய புகார்களை சிபிஐ கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். இதனையடுத்து சிபிஐ அறிக்கை மீதான கருத்துகளை மனுதாரர் மேற்கொள்ளலாம் என்று கோர்ட் அனுமதித்தது.