இந்தியா

ஈரான் வான்வெளிக்கு பதிலாக மாற்றுப் பாதை: ஏர் இந்தியா முடிவு

செய்திப்பிரிவு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ஈரான் வான்வெளிக்கு பதிலாக வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஈரான் ராணுவத்தின் முக்கியத் தளபதியாகவும், குட்ஸ் படையின் தளபதியாகவும் இருந்த காசிம் சுலைமானை கடந்த 3-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் முலம் அமெரிக்கா கொலை செய்தது. பாக்தாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய சுலைமானை அமெரிக்க ராணுவம் தனது ஆளில்லா விமானத்தின் மூலம் ஏவுகணையை வீசித் தாக்குதல் நடத்திக் கொன்றது. சுலைமானுடன் சேர்ந்து அவரின் மருமகன் முகந்தீஸ் உள்பட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலைக்குப் பழி தீர்க்கும் விதத்தில் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது இன்று அதிகாலை ஈரான் ராணுவம் ஏவுகணைகள் வீசித் தாக்குதல் நடத்தியது. இராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பா செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ஈரான் வான்வெளிக்கு பதிலாக வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தனஞ்செய் குமார் கூறுகையில் ‘‘ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். எனவே தற்போது ஈரான் வான்வெளியில் செல்ல வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அதுவரை மாற்று வழியில் விமானத்தை இயக்க முடிவெடுத்துள்ளோம். பதற்றம் தணிந்த பிறகு மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்போம்.’’ எனக் கூறினார். இதனால் பயண தூரம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT