நாடுமுழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.
அதுபோலவே அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ளன. குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘மோடி - அமித் ஷாவின் பொதுமக்கள் விரோத, தொழிலாளர் விரோத பேரழிவு கொள்கைகளின் விளைவாக வேலையின்மை, பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தி மோடியின் முதலாளித்துவ நண்பர்களின் விற்பனை செய்வது போன்றவை நியாயப்படுத்தப்படுகிறது.
இன்று 25 கோடி தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யபொது வேலைநிறுதத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களை நான் வணங்குகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.