இந்தியா

தானே: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 12 பேர் பலி

பிடிஐ

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் 50 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.

தானே ரயில் நிலையம் அருகே பி-கேபின் பகுதியில் இருந்த நான்கு மாடிக் கட்டிடம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைப் பிரிவினர் உடனடி யாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கட்டிடம் தொடர்ந்து சரிந்து விழுந்து கொண்டே இருந்தது. இரவு என்பதால், போதிய வெளிச்சம் இல்லை. இதனால், மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் ஏராளமானவர்களை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர். இடிபாடுகளிலிருந்து 7 வயதுக் குழந்தை உட்பட 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயத்துடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கட்டிடம் அபாயகர மானது என்ற பட்டியலில் வைக்கப் பட்டிருந்ததாக மாநகராட்சி ஆணையர் சுனில் சவாண் தெரிவித் துள்ளார்.

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT