பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 625 டன் எடையுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானப் படை கொண்டு சேர்த்ததாக விமானப்படை முன்னாள் தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.
மும்பையில் ஐஐடி சார்பில் நேற்று நடந்த தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கில் விமானப் படை முன்னாள் தளபதி பி.எஸ். தனோவா பேசியதாவது:
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. புதிய ரூபாய் நோட்டுகள் மக்களிடம் சென்று சேர அப்போது விமானப் படை உதவியாக இருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 625 டன் எடையுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானப் படை கொண்டு சேர்த்தது. எத்தனை கோடிகள் கொண்டு செல்லப்பட்டன என்று எனக்குத் தெரியாது.
ரஃபேல் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதுபோன்ற சர்ச்சைகளால் ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. படைகளின் திறன் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழலின்போது விமானப்படை வீரர் அபிநந்தன் மிக் 21 விமானத்துக்குப் பதில் ரஃபேல் விமானத்தில் பறந்திருந்தால் நிலைமைகள் வேறாக இருந்திருக்கும் என்றார்.