இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த உ.பி. அரசு தீவிரம்

செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த உத்தரபிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் விளங்குகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக உள்ள மக்கள், மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்
தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்ட மானது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள மத சிறுபான்மையினரான இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் ஆகியோர் மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் அடைக்கலமாகி இருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இஸ்லாமிய நாடுகள். அங்கு வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் என்பதால் அங்கு அவர்கள் சிறுபான்மையினர் இல்லை என்றும் அந்நாடுகளில் முஸ்லிம்கள் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக மாட்டார்கள் என்பதால் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது
என்று மத்திய அரசு ஏற்கெனவே விளக்கமளித்து உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

ஆனால், இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று மாநிலங்கள் கூற முடியாது என்றும் சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசுகளின் அரசியல் சாசனக் கடமை என்றும் மத்திய அரசு கூறுகிறது. சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பிலும் பிரம்மாண்ட பேரணிகள், விளக்கக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில பாஜக அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள முதல் மாநிலமாக விளங்குகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதுகுறித்து லக்னோவில் செய்தி
யாளர்களிடம் பேசிய மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவினாஷ் அவஸ்தி கூறியதாவது:

குடியுரிமை இல்லாமல் உத்தரபிரதேசத்தில் பல ஆண்டுகளாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டறியுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து உ.பி.யில் வசிப்பவர்கள் குறைவுதான். பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி அகதிகளாக வந்து உ.பி.யில் வசிப்பவர்கள் கணிசமாக உள்ளனர்.

மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இங்கு அகதிகளாக வந்த உண்மையான அகதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகதிகளாக வந்து உத்தர பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு புதிய குடியுரிமை திருத்த சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அவினாஷ் அவஸ்தி கூறினார்.

SCROLL FOR NEXT