சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி இடையேயான கூட்டணி இயற்கைக்கு மாறானது; அவர்கள் உருவாக்கிய மகாராஷ்டிர விகாஸ் அகாடி அரசாங்கம் அதன் எடை தாங்காமல் தானே சரிந்து விடும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு உருவாகியுள்ளநிலையில் சிஏஏ குறித்த மிகப் பெரிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக இன்றுமுதல் தொடங்கியுள்ளது. ஒரே நாளில், கட்சியின் மூத்தத் தலைவர்கள் 42 பேர் 42 இடங்களில் வீடு வீடாக சிஏஏ பிரச்சாரங்களைத் தொடங்குகின்றனர்.
சிஏஏக்கு ஆதரவாக பாஜகவின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாக்பூர் எம்.பி. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் குடும்பங்கள் உட்பட பல வீடுகளுக்கு விஜயம் செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலாக்காக்கள் ஒதுக்கீடு சம்பந்தமாக மகாராஷ்டிரா அரசாங்கத்தில் குழப்பம் நிலவி வருகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சர்களில் ஒருவர் ராஜினாமா செய்யப் போவது உறுதி.
சிவசேனாவுக்கும் காங்கிரஸ்-என்சிபிக்கும் இடையே கருத்தியல் ஒற்றுமை இல்லை. இந்த கூட்டணி இயற்கைக்கு மாறானது. இந்த அரசை கவிழ்க்கவேறு யாரும் தேவையில்லை. அவர்கள் உருவாக்கிய மகாராஷ்டிர விகாஸ் அகாடி அரசாங்கம் அதன் எடை தாங்காமல் தானே சரிந்து விடும்.
மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணி அரசாங்கத்திலிருந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் மறைந்த சிவசேனா தலைவரும் தேசபக்தருமான பால் தாக்கரே மும்பையில் இருந்து சட்டவிரோத வங்கதேச குடியேறியவர்களை வெளியேற்ற விரும்புவதாகக் கூறினார், அதேசமயம் தற்போதைய சிவசேனா தலைமையிலான கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரா அரசாங்கம் அதை எதிர்க்கிறது.
இந்துத்துவத்தின் கொள்கைகளை சிவசேனா கைவிட்டுவிட்டது. "மராத்தி மனூஸ்" என்பது அதிகாரத்திற்காக மட்டும்தான் என்பது புலப்படத் தொடங்கிவிட்டது. இது கட்சிக்கு எதிராக பரவலான கோபத்தை உருவாக்குகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சரும் நாக்பூர் எம்.பியுமான நிதின் கட்கரி தெரிவித்தார்.