டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி அரசின் சிறப்புத் திட்டமாகக் கருதப்படுவது தெருமுனை அரசு சிகிச்சை மருத்துவ மையங்கள். அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பின்பற்றும் வகையில் இந்த திட்டத்தை ஜார்கண்டிலும் அமலாக்குகிறார் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன்.
ஜார்கண்டில் கடந்த வாரம் புதிதாகப் பதவி ஏற்ற முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான இவர் நேற்று இரவு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார்.
டெல்லியை போல் உடல்நலம் மற்றும் கல்வி தமது முக்கிய நோக்கமாக இருக்கும் எனவும் சோரன் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதற்காக டெல்லி அரசு தமது பட்ஜெட்டில் அதிகபட்சமான நிதித்தொகையை ஒதுக்குகிறது.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டெல்லியில் கெஜ்ரிவாலின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார் சோரன். இதில், அவரை கவர்ந்த தெருமுனை மருத்துவ மையங்களை தமது மாநிலத்திலும் உடனே அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கேஜ்ரிவால் குறிப்பிடுகையில், ‘ஹேமந்தின் தலைமையில் ஜார்கண்ட் நிச்சயம் வளர்ச்சி பெறும். இருவரது சந்திப்பில் இரண்டு மாநிலங்களுக்கும் பலனாக பல செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.’ எனத் தெரிவித்தார்.
பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் இரண்டு கட்சி தலைவர்களுமே அக்கட்சியை வென்று ஆட்சி டெல்லி மற்றும் ஜார்கண்டிலும் ஆட்சியை அமைத்துள்ளன. ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் பதவி ஏற்பிற்கு ஜேரிவாலும் சென்றிருந்தார்.
தெருமுனை மருத்துவ சிகிச்சை மையங்கள் விவரம்
பொதுமக்கள் தம் உடல்நிலை சிகிச்சைக்காக இலவசமாகப் பெற அரசு மருத்துவமனைகளுக்கு செல்வது உண்டு. அங்கு நிலவும் நெரிசல் அவர்களது அன்றைய முழுநாளை செலவிடச் செய்து விடுவது உண்டு.
சாதாரண மருத்துவச் சிகிச்சைக்களின் ஆலோசனைகளுக்கும் பொதுமக்கள் அந்த நெரிசலில் சிக்க வேண்டி இருக்கும். மேலும் சில அரசு மருத்துவமனைகளில் பல மணிநேரம் காக்க வேண்டியும் உள்ளது.
இதை தவிர்க்க டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு தெருமுனை சிகிச்சை மையங்களை துவக்கி நடத்தி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் அமைந்துள்ள இங்கு அருகிலுள்ள டெல்லியின் எய்ம்ஸ் உள்ளிட்டப் பிரபல அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்
இதற்காக, பொதுமக்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காட்டினால் சிகிச்சை இலவசமாகக் கிடைக்கிறது. இதில் தேவைப்படும் கூடுதல் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு அவர்கள் மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.