யாகூப் மேமன் தூக்குத் தண்டனை விவகாரத்தை கையிலெடுத்த 3 முன்னணி சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த 3 சேனல்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
யாகூப் மேமன் தூக்கு விவகாரத்தை காண்பித்த இந்த சேனல்களின் அணுகுமுறைகள் பல கேள்விக்குரியதாக உள்ளது என்ற வகையில் நோட்டீஸ் அனுப்பப் பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சேனல்களின் ‘கவரேஜ்’ நிகழ்ச்சி விதிகளுக்கு உட்பட்டதுதானா என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
நிகழ்ச்சி விதிமுறைகளின் பிரிவுகள் குறித்து கூறிய அதிகாரிகள், அவதூறு ஏற்படுத்தும் விதமாகவோ, ஆபாசமாகவோ, அரைஉண்மை உள்ளடக்கங்களையோ, தவறான தகவல்களையோ அளிக்கக் கூடாது என்று கூறுகிறது, மேலும் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, தேசத்துக்கு எதிரான அணுகுமுறைகளில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமான உள்ளடக்கங்களையோ ஒலி/ஒளிபரப்புதல் கூடாது என்றும் தெரிவித்தனர்.
மேலும் நிகழ்ச்சி விதிகளின் சில பிரிவுகள், நீதித்துறை மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் முடிவுகளுக்கு எதிரான கருத்துகளை எதிரொலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் எலெக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையம் சுமார் 600 சானல்களின் உள்ளடக்கங்களை கண்காணித்துள்ளது.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் நிழலுலக குற்றவாளியான சோட்டா ஷகீலின் தொலைபேசி நேர்காணலை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. மற்றொரு சேனலில் யாகூப் மேமன் வழக்கறிஞரின் கருத்தை ஒளிபரப்பியதாக தெரிகிறது.
இந்த சானல்கள் அளிக்கும் பதில்களுக்குப் பிறகு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவுள்ளது