சாவர்க்கர் குறித்து அவதாறான கருத்துகளைக் கொண்ட புத்தகத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனா நேற்று வலியுறுத்திய நிலையில், கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இதை வலியுறுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற சேவா தளம் வீர சாவர்க்கர் குறித்த புத்தகத்தை வெளியிட்டது. "வீர் சாவர்க்கர் கித்னே வீர்?(வீர சாவர்க்கர் எவ்வளவு பெரிய வீரர்) என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் சாவர்க்கரின் தேசபக்தி குறித்தும், காந்தியைக் கொலை செய்த நாதூராம் கோட்சேவுடன் சாவர்க்கருக்கு தொடர்பு இருந்தது என்றும், ஆங்கிலேயரிடம் இருந்து உதவித்தொகை பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தப் புத்தகத்துக்கு பாஜக, சிவசேனா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் சிவசேனா இருந்தபோதிலும் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தது.
சிவசேனா கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், "வீர சாவர்க்கர் மிகப்பெரிய மனிதர். இன்னும் மிகப்பெரிய மனிதராகவே இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அவருக்கு எதிராகப் பேசி வருகின்றனர். இது அவர்களின் மனதில் அழுக்கு இருப்பதையே காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மகா விகாஸ் அகாதியில் உள்ள மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது.
என்சிபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், " வீர சாவர்க்கர் இப்போது உயிரோடு இல்லை. அவர் உயிருடன் இல்லாத நிலையில் அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது சரியான முறையில்லை. சாவர்க்கருக்கும், நமக்கும் இடையே ஏராளமான கொள்கைரீதியான, சித்தாந்தரீதியான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவர் உயிருடன் இல்லாத நிலையில் அவருக்கு எதிராகத் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளைத் தவிர்க்கலாம். சாவர்க்கர் குறித்த அந்தப் புத்தகத்தைத் திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதற்கிடையே மகாராஷ்டிர பாஜக மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோரும் சாவர்க்கர் குறித்த புத்தகத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் அந்தப் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.