மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீவிரக் கண்காணிப்புக்கு ’பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ)’ எனும் முஸ்லிம் அமைப்பு உள்ளாகி வருகிறது. இந்த அமைப்பு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான உத்தரப் பிரதேசப் போராட்டங்களின் கலவரப் பின்னணியில் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலானது முதல் நாடு முழுவதிலும் பல இடங்களில் அதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், உ.பி.யின் பல்வேறு நகரங்களில் இந்தப் போராட்டம் தீவிரமடைகிறது.
உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தொடங்கிய போராட்டம் அம்மாநிலத்தின் மற்ற இடங்களுக்கும் பரவியது. இது, டிசம்பர் 19 ஆம் தேதியில் அமைதியாகத் தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.
குறிப்பாக தலைநகரான லக்னோ, கான்பூர், பெரோஸாபாத், மீரட், பிஜ்னோர், சம்பல், ராம்பூர் மற்றும் புலந்த்ஷெஹர் ஆகிய நகரங்களின் கலவரத்தில் பல பேர் பலியாகினர். இதற்கு போராட்டக்காரர்கள் மற்றும் உ.பி. போலீஸாரின் இடையிலான மோதலும், துப்பாக்கிச் சூடும் காரணமானது.
இந்தக் கலவரத்தின் பின்னணியில் பிஎப்ஐ இருப்பது காரணம் என உ.பி. மாநில காவல்துறை சந்தேகிக்கிறது. இதன் மீது அறிக்கையை அனுப்பும்படியும் அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் உ.பி. மாநிலக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி அமைதியாகப் போராடினாலும் அதில் குறிப்பிட்ட சிலரின் நடவடிக்கையால் கலவரம் ஏற்படுகிறது. கைது செய்யப்பட்ட கலவரக்காரர்களில் 15 பேர் பிஎப்ஐயை சேர்ந்தவர்கள். எனவே போராட்டங்களில் பிஎப்ஐயின் பங்கு குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் ஆதாரங்களைப் பொறுத்து உபியில் பிஎப்ஐ தடை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன'' எனத் தெரிவித்தனர்.
உ.பி.யில் பிஎப்ஐயின் நடவடிக்கைகள் 2010 ஆம் ஆண்டு முதல் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மாநிலத்தின் முஸ்லிம்கள் மீதான பொதுப் பிரச்சினைகளில் பிஎப்ஐக்கு முன்பாக ’சிமி’ மாணவர் அமைப்பின் தலையீடுகள் இருந்தன.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் ஏப்ரல் 25, 1977-ல் தொடங்கப்பட்டது சிமி. இது, கடந்த 2001-ல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசால் நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டது.
தற்போது சிமியின் புதிய அவதாரமாக பிஎப்ஐ உருவெடுத்து வருவதாகவும் மத்திய உள்துறையால் சந்தேகிக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்தமுறை ஆட்சி செய்த பாஜக அரசு, பிப்ரவரி 21, 2018-ல் பிஎப்ஐயை தடை செய்தது.
இதற்கு எதிரான வழக்கில் அந்தத் தடையை ஆகஸ்ட் 27-ல் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பிறகு இந்தத் தடை வேறு சில காரணங்களைக் காட்டி பிப்ரவரி 12, 2019-ல் பாஜக அரசால் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 2006-ல் கேரளாவில் தொடங்கிய பிஎப்ஐயின் நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு அமைப்பினரால் விசாரிக்கப்பட்டும் வருகிறது. எனினும், இதற்கு பிஎப்ஐ அமைப்பைத் தடை செய்யும் வகையில் இதுவரையும் ஆதாரபூர்வமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டம் தொடங்கிய பின் பிஎப்ஐ அமைப்பின் தடைக்கு உ.பி. அரசும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது. எனவே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீவிரக் கண்காணிப்பில் மீண்டும் பிஎப்ஐ உள்ளாகியிருப்பது தெரிகிறது.