உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்தாம் விரைவு ரயில் தடம் புரண்டு, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே சிபிஆர்ஓ அலோக் சிங் கூறுகையில், "டெல்லியிலிருந்து கோரக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில், சந்த் கபிர் நகர் மாவட்டம் சுரெய்ப் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வந்தது. அப்போது, திடீரென தடம் புரண்டு அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்" என்றார். இந்த விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளதாக ரயில்வே துறை கூடுதல் இயக்குனர் வீரேந்திரகுமார் தெரிவித்துள்ளார். எனினும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் கூறியதாவது:
இந்த விபத்து குறித்து நேரில் சென்று விசாரிக்குமாறு ரயில்வே பாதுகாப்பு (வடகிழக்கு) ஆணையர் பி.கே. வாஜ்பாயிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வாரிய உறுப்பினர்கள் (பொறியியல்) வி.கே.குப்தா, அலோக் ஜோரி (இயந்திரவியல்), ரயில்வே சுகாதார சேவைப் பிரிவின் இயக்குநர் ஆர்.பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர் என்றார்.
இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசாக காயமடைந் தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
விபத்து காரணமாக டெல்லி கோரக்பூர் இடையே செல்ல வேண்டிய ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 6 பெட்டிகள் சேதம் அடைந்ததாகவும் மீட்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பரத் லால் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந் தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் இரங்கல்
ரயில் விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுபோல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்துகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத்தை தொலபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மோடி, பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உ.பி. ஆளுநர் பி.எல் ஜோஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ரயில் விபத்து குறித்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். மாநில அரசும் ரயில்வே துறையும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை செய்யும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.