ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 10-ம் தேதி அவர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத வழிகளில் சொத்துகளை குவித்துள்ளதாக ஜெகன்மோகனுக்கு எதிராக கடந்த 2011-ல் சிபிஐ பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. இது தொடர்பாக 2012 மே மாதம் கைது செய்யப்பட்ட ஜெகன், 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 11 குற்றப்பத்திரிகைகள் மற்றும் ஒரு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஜெகனும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வராக ஜெகன் கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். முதல்வருக்கான பணி கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன் கோரிக்கைக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து இதற்கு முன் 10 முறை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெகனுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள் ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
“குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான். ஆதலால், ஜெகன்மோகன் வரும் 10-ம் தேதி இவ்வழக்கில் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதனால் ஜெகன் முதல்வரான பிறகு முதல்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என்றா லும் இந்த உத்தரவுக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது.