மும்பை தொடர்குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட நிலையில், தூக்கு தண்டனை விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் தூக்கு தண்டனையை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா நேற்று தனி நபர் தீர்மானம் தாக்கல் செய்தார்.
இந்த மனு பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அல்லாமல் எம்.பி.க்கள் கொண்டு வருவது தனி நபர் தீர்மானம் ஆகும்.
குற்றம் இழைத்ததற்காக ஒருவரின் உயிரை பறிப்பது நீதிபரிபாலன நடைமுறைகளுக்கு உகந்தது அல்ல. நீதிபரிபாலனம் என்பது இரக்கம், மனிதநேயம் ஆகியவற்றுக்கு உட்பட்டு குற்றம் இழைத்தவரை திருந்தச் செய்யவும் அவரது மனோபாவத்தை மாற்றுவதற்கு இடம் தருவதாகும் என தனது தீர்மானத்தில் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் சார்ந்த வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 94 சதவீதம் பேர் தலித் அல்லது மத சிறுபான்மையினர் ஆவர் என தேசிய சட்ட பல்கலை மாணவர்கள் நடத்திய ஆய்வில் தொகுக்கப்பட்ட தகவலை இந்த தீர்மானத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவர் குற்றம் செய்துவிட்டார் என்பதால் அவர் திருந்துவதற்கான வாய்ப்பு அருகிவிடவில்லை. மாறாக மனிதத்தின் மதிப்பை அவர் புரிந்துகொள்ள நல்ல அணுகுமுறை தேவை. கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கும் இது பொருந்தும்.
மரண தண்டனையை இந்தியா நிராகரிக்க வேண்டும். இதுபற்றி நாடாளுமன்றமும் அரசும் முடிவு எடுக்கும் வரை மரணதண்டனையை தாற்காலிகமாக விலக்கி வைக்க வேண்டும்.
குற்றம் இழைப்பது என்பது சமூக பிரச்சினை. சட்ட பிரச்சினை அல்ல என்று ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழியும் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி மாநிலங்களவையில் தனி நபர் மசோதா கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.