குடியரசு தினத்தை முன்னிட்டுடெல்லியில் பல்வேறு மாநிலங்கள், மத்திய அரசு அமைச்சகங்கள் சார்பில் நடக்கும் அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.
மேற்கு வங்க மாநிலத்தின் சார்பில் இடம் பெறுவதாக இருந்த அலங்கார ஊர்திகளில் இடம்பெற்ற காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருந்ததாக ராணுவ அமைச்சகம் சார்பில் நடந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் கருத்துதெரிவிக்கப்பட்டதால் மேற்கு வங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான தபஸ்ராய் கூறுகையில், ‘‘மத்திய அரசுபழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குடியரசுதின அணிவகுப்பில் மேற்குவங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மேற்குவங்க மக்களை அவமதிக்கும் செயல்’’என்றார்.
மாநில பாஜக தலைவர்திலிப் கோஷ் கூறுகையில், ‘‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.அவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மேற்குவங்க அரசு பின்பற்றாததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லா பிரச்சினைகளையும் அரசியலாக்குவதை திரிணமூல் காங்கிரஸ் நிறுத்த வேண்டும்’’ என்றார்.