இந்தியா

‘நேபாளியர்கள் போன்ற தோற்றம்’: சகோதரிகளுக்கு பாஸ்போர்ட் மறுத்ததால் எழுந்த சர்ச்சை - விசாரணைக்கு உத்தரவு

விகாஸ் வாசுதேவா

ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் சந்தோஷ், ஹீனா என்கிற சகோதரிகளுக்கு ‘நேபாளியர்கள் போன்ற தோற்றம்’ காரணமாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பாஸ்போர்ட் மறுத்தது சர்ச்சையாக மாற கடைசியில் மாநில உள்துறை அமைச்சகம் தலையிட்டு இவர்களுக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் பாஸ்போர்ட் மறுப்பு குறிப்பில், யார் இவர்களை ‘நேபாளியர்கள் ஜாடை’ என்று குறிப்பிட்டது என்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சண்டிகரில் உள்ள மண்டல் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி சிபாஷ் கபிராஜ் தி இந்து ஆங்கிலம் நாளேட்டுக்குக் கூறும்போது, “இருவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையாளப்பட்ட மொழிப்பாணியில் எனக்கு உடன்பாடில்லை. அதில் ‘விண்ணப்பதாரர்கள் நேபாளியர்கள் போன்று இருக்கிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. யார் இப்படி எழுதி வைத்தது என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது, அப்படி சொன்னவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய குடியுரிமையை உறுதி செய்த பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். சில சமயங்களில் நேபாளியர்களும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்வதுண்டு. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை வேறொரு பயண ஆவணம் வழங்கப்படும் இதற்குப் பெயர் அடையாளச் சான்றிதழ் ஆகும். இதே சான்றிதழ் இந்தியாவில் வசிக்கும் திபெத்தியர்களுக்கும் வழங்கப்படும். இந்த நிலைமையில்தான் அவர்கள் இந்திய குடியுரிமைதாரர்களா என்பதை போலீசாரை அனுப்பி விசாரிப்போம்.

இந்த சகோதரிகள் விவகாரத்தில் இவர்களது தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் அதிகாரி உரிய நடைமுறையைக் கடைப்பிடித்திருக்க வேண்டியது அவசியம்.

இந்த விஷயத்தில் சகோதரிகள் தாங்கள் இந்திய குடிமக்கள்தான் என்பதற்கான ஆவணங்களையும் காட்டியுள்ளனர். அதன் பிறகும் எப்படி பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது என்பதும் விசாரிக்கப்படும்” என்றார்.

சகோதரிகளுக்கு மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தலையீட்டிற்குப் பிறகு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT