தெற்கு டெல்லியில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிக்கப்பட்டதற்காக 20 வயது இளைஞர் தனது பைக்கை தீவைத்து எரிக்கும் காட்சி. 
இந்தியா

ஹெல்மெட் இல்லாததால் அபராதம்; ஆவேசத்தில் பைக்கை தீ வைத்து எரித்த இளைஞர் கைது

பிடிஐ

ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட இளைஞர், தனது பைக்கை தீ வைத்து எரித்தார். இதனால் டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இதனால் சாலை விதிகளை சரிவர கடைப்பிடிக்காமல் பிடிபடும் நபர்கள் 20 ஆயிரம் 30 ஆயிரம் என அபராதங்களைக் கட்ட நேரிடுகிறது. அபராதத் தொகை அதிகமாக இருப்பதால், சில இளைஞர்கள் தங்கள் பைக்குகளை பொது இடங்களில் எரிக்கும் சம்பவங்களும் நடப்பது உண்டு.

இந்நிலையில் ஜனவரி 1 (நேற்று) காலை தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் விகாஸ் (20) என்ற இளைஞர் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றார். போக்குவரத்து போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இதனை அடுத்து சிறிது நேரம் அமைதியாக இருந்த விகாஸ், திடீரென ஆவேசமடைந்து தனது பைக்கை தீ வைத்து எரித்தார்.

தீவைத்துவிட்டு பிளாட்பரத்தின் மர நிழலில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞரால் அப்பகுதி பரபரப்படைந்தது. இதனை அடுத்து போக்குவரத்து போலீஸார் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து வந்து பைக்கை நீரூற்றி அணைத்தனர்.

பின்னர் பைக்கை தீ வைத்து எரித்த விகாஸை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT