இந்தியா

திருப்பதி கோயிலில் விடிய, விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை முதலே திருமலையில் பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர். இதனால் டிசம்பர் 31ம்தேதி மதியம் முதலே திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் நிரம்பின. போகப்போக பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், நாராயணகிரி பகுதி வரை பக்தர்கள் வரிசையில் நிற்க தொடங்கினர்.

ஆங்கில புத்தாண்டன்று சுவாமியை தரிசிக்க வேண்டுமென்ற நோக்கில் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வரிசையில் காத்து நின்றனர். விடிய, விடிய பக்தர்கள் வரிசையில் காத்திருந்ததை தொடர்ந்து, நேற்று அதிகாலை 3 மணி முதல்,பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர், காலை 6 மணி முதல் 8.30 மணி வரை நேரில் கோயிலுக்கு வந்த விஐபி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சர்வ தரிசனம் தொடங்கியது. தொடர்ந்து இரவு 11 மணி வரை சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புத்தாண்டையொட்டி பல வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் திருமலைக்கு வந்திருந்தனர். மேலும், குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகள் ஏதும் இன்றி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க தகுந்த ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT