இந்தியா

ஊழல் புகார்களை தெரிவிக்க விரைவில் லோக்பால் படிவம்

செய்திப்பிரிவு

லோக்பால் அமைப்பில் புகார் செய்வதற்கான மாதிரி படிவம் விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்பால் சட்டத்தின்படி, மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் செயல்படுகின்றன. பிரதமர், முதல்வர்கள், அமைச்சர் கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை இந்த அமைப்புகள் விசாரிக்கும். லோக்பால் தலைவராக நீதிபதி பினாகி சந்திரகோஸ் கடந்த மார்ச் 23-ம் தேதி பொறுப்பேற்றார். இதன் உறுப்பினர்களாக மார்ச் 27-ல் 8 பேர் பொறுப்பேற்றனர். லோக்பால் சட்டத்தின்படி, குறிப்பிட்ட படிவத்தில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், மாதிரி படிவம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரையில் 1,065 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 1,000 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரம் கூறுகிறது.

இந்நிலையில், மத்திய பணியாளர் நலத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “புகார் செய்வதற்கான மாதிரி படிவம் குறித்து சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தினோம். இதன் அடிப்படையில் படிவத்தில் என்னென்ன விவரங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்த தகவலை சட்ட அமைச்சகம் வழங்கி உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் மாதிரி படிவம் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.- பிடிஐ

SCROLL FOR NEXT