நிலம் கையக மசோதாவில் பாஜக அரசு கொண்டு வந்த 6 முக்கியத் திருத்தங்களை திரும்பப் பெற நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நிலம கையகப் படுத்த விவசாயிகள் ஒப்புதல் தேவை என்ற பிரிவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
இதனால் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள் மீண்டும் புதிய மசோதாவில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் ஒப்புதல் தேவை என்ற பிரிவும், நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூகத் தாக்க மதீப்பீடு ஆகியவை மீண்டும் மசோதாவில் இடம்பெறுகிறது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 11 பாஜக உறுப்பினர்களும், விவசாயிகள் ஒப்புதல் மற்றும் சமூகத்தாக்க மதிப்பீடு ஆகிய திருத்தங்களை மீண்டும் சேர்க்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, பாஜக தங்களது சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்த மசோதா திருத்தங்களை கைவிடுவதைத் தொடர்ந்து அலுவாலியா தலைமை நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆகஸ்ட் 7-ம் தேதி கருத்தொருமித்தல் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இது எங்களது 2013 நிலச்சட்டம் போன்றுதான் உள்ளது" என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களான டெரிக் ஓ’பிரையன் மற்றும் கல்யாண் பானர்ஜி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர், காரணம், புதிய திருத்தங்கள் காலைதான் தங்களுக்கு வழங்கப்பட்டது என்றும் எனவே அதனை ஆய்வு செய்ய நேரம் போதவில்லை என்றும் கூறினர்.
6 திருத்தங்கள் மீதான விவாதத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கொண்டு வந்த நில கையக மசோதாவின் 15 திருத்தங்களில் 9 சர்ச்சைக்குரிய திருத்தங்களை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.
விவசாயிகள் ஒப்புதல் குறித்த திருத்தம் மற்றும் சமூக விளைவு மதிப்பீடு குறித்த திருத்தம் உட்பட 6 முக்கிய திருத்தங்கள் திங்களன்று விவாதிக்கப்பட்டது என்றும் தனியார் நிறுவனம் என்ற வார்த்தைக்கு பதிலாக தனியார் என்ற வார்த்தையை பயன்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக காங்கிரஸார் கோரியுள்ளனர்.