இந்தியா

பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக உ.பி.யில் 26 பேருக்கு நோட்டீஸ்: சம்பல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல பகுதிகளில் கலவரங்களும், வன்முறைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

இந்தச் சம்பவங்களில் ஏராளமான பொது சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்தே அதற்கான இழப்பீட்டை பெற உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது, சேதப்படுத்தப்பட்ட சொத்துகளின் மதிப்பினை கணக்கிடும் பணி அங்கு நடைபெற்று வருகிறது. மேலும், பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிஸ் நோட்டீஸ்களும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு நோட்டீஸ் பெறப்பட்டவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். அதில், அவர்கள் மீது தவறு இருப்பது தெரியவந்தால், சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளுக்கான இழப்பீட்டை அவர்களிடமிருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக அடையாளம் தெரியவந்த 26 பேருக்கு அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT