இந்தியா

‘பழங்குடியினர் குடும்பத்தில் பிறந்தது குற்றமா?’- வெளியேறும் ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் மீது ஹேமந்த் சோரன் வழக்கு

பிடிஐ

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் சார்ந்த சாதியை இழிவுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் வெளியேறும் ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சோரன் டிசம்பர் 19ம் தேதி புகார் பதிவு செய்தார், இதனையடுத்து சப்-டிவிஷினல் போலீஸ் அதிகாரி அர்விந்த் உபாத்யாய் முதற்கட்ட விசாரணை நடத்தி மிஹிஜம் காவல் நிலையத்தில் முதல் தகவலறிக்கைப் பதிவு செய்ததாக ஜம்தாரா எஸ்.பி. அன்ஷுமன் குமார் தெரிவித்தார்.

ரகுபர் தாஸ் மீது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரகுபர் தாஸுக்கு எதிராக தும்கா காவல்நிலையத்தில் சோரன் புகார் பதிவு செய்தார்.

ஜம்தாராவில் தேர்தல் கூட்டம் ஒன்றில் சோரன் சார்ந்த சாதியை இழிவாகப் பேசியதாக ரகுபர் தாஸ் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக ஹேமந்த் சோரன் கூறும்போது, “எஸ்.சி/எஸ்.டி காவல் நிலையத்தில் நான் புகார் பதிவு செய்தேன், ரகுபர் தாஸ் என் சாதி குறித்து இழிவாகப் பேசினார், அவரது வார்த்தைகள் என்னையும் என் கவுரவத்தையும் காயப்படுத்தின, பழங்குடிக் குடும்பத்தில் பிறந்தது குற்றமா?” என்று காட்டமாகக் கேட்டார்.

ஆனால் ஜார்கண்ட் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதியோ கூறும்போது சோரனின் புகார் ‘அபத்தக் குற்றச்சாட்டு’ என்றும் காவி உடை அணிந்தவர்கள் பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பவர்கள் என்று சோரன் கூறினார் அதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், அதிலிருந்து தப்பிக்க ரகுபர் தாஸ் மீது இத்தகைய ‘அபத்தக் குற்றச்சாட்டை’ அவர் வைத்துள்ளார், என்றார்.

SCROLL FOR NEXT