முஸ்லிம் அகதிகளுக்கு ஏன் குடியுரிமை இல்லை என்பதே எங்கள் கேள்வி என மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்ஆர்சி செயல்படுத்தப்படும் என அமித் ஷா கூறுகிறார்.
நாடுமுழுவதும் செயல்படுத்தப்படாது என மோடி கூறுகிறார். இதில் எது உண்மை. அகதிகளாக வரும் இந்துக்கள் உள்ளிட்ட மற்றவர்களுக்கு ஏன் குடியுரிமை என்ற கேள்வி இல்லை. அதேசமயம் முஸ்லிம் அகதிகளுக்கு ஏன் குடியுரிமை இல்லை என்பதே எங்கள் கேள்வி’’ எனக் கூறினார்.