ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

ராகுலும், பிரியங்காவும் பெட்ரோல் வெடிகுண்டு போன்றவர்கள்: ஹரியாணா அமைச்சர் பேச்சால் சர்ச்சை

ஏஎன்ஐ

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் பெட்ரோல் வெடிகுண்டு போன்றவர்கள் என்று பாஜக மூத்த தலைவரும் ஹரியாணா அமைச்சருமான அனில் விஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 16 பேர் உயிரிழந்தனர்.

இதில் மீரட் நகரில் நடந்த கலவரத்தில் பலியான ஒருவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் சென்றனர். அப்போது அவர்கள் இருவரையும் மீரட் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும், போலீஸாரிடம், எங்களால் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது, அவ்வாறு ஏற்பட்டால் அதற்கு இருவரும் பொறுப்பேற்கிறோம் எனதெரிவித்து அறிக்கை அளித்ததால் அனுமதிக்கப்பட்டனர்.

ஹரியாணா மாநில அமைச்சர் அனில் விஜ்

இந்த சம்பவம் குறித்து ஹரியாணா அமைச்சர் அனில் விஜ், ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் அதில் " காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும், உயிருள்ள பெட்ரோல் வெடிகுண்டு என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் இருவரும் எங்குச் செல்கிறார்களோ அந்த இடத்தில் இவர்கள் பேசும் நெருப்பு வார்த்தைகளால் பதற்றமும், கலவரமும் ஏற்பட்டு பொதுச்சொத்துக்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்

ஹரியானா அமைச்சர் அனில் விஜ் இதுபோல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது முதல்முறை இல்லை, இதற்கு முன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மனநிலை சரியில்லாதவர் என்று பேசினார்.

பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து அறிக்கைகளை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் அனில் விஜ், ட்விட்டரில் " தேசத்தின் குடியரசுத் தலைவர் மம்தாவின் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். மனநிலை சரியில்லாத இதேபோன்றவர்கள் அரசியலமைப்புச்சட்டத்தின் முக்கியமான முதல்வர் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள்தானா ஆலோசியுங்கள்" என்று கடந்த மே மாதம் ட்விட் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT